SA vs AUS, 3rd ODI: காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகிய நோர்ட்ஜே!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் என்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
இதில் நேற்று முந்தினம் ப்ளூம்போயிண்டன் நகரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய தென் ஆப்பிரிக்காவை அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 392/8 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் டேவிட் வார்னர் சதமடித்து 106 ரன்களும் மார்னஸ் லபுஷாக்னே 124 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியால் 41.5 ஓவர்களில் 269 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜே காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த நோர்ட்ஜே, அப்போட்டியில் 5 ஓவர்களை மட்டுமே வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.