IND vs SL: விக்கெட்டை தாரைவார்த்த மயங்க் அகர்வால்!

Updated: Sat, Mar 12 2022 15:54 IST
Image Source: Google

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்கியது. இந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடப்பதால், பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி ஒரேயொரு மாற்றத்துடன் களமிறங்கியது. ஸ்பின்னர் ஜெயந்த் யாதவுக்கு பதிலாக அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட்டார். 

இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - மயன்க் அகர்வால் களமிறங்கினர். இருவருமே நல்ல டச்சில் பேட்டிங்கை தொடங்கினர். மயன்க் அகர்வால் முதல் ஓவரிலேயே பவுண்டரி அடித்தார். 2வது ஓவரின் முதல் பந்தை தனது முதல் பந்தாக எதிர்கொண்ட ரோஹித், முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார்.

ஆனால் 2ஆவது ஓவரில் யாருமே எதிர்பார்த்திராத மற்றும் விரும்பாத சம்பவம் ஒன்றின் மூலமாக மயன்க் அகர்வால் ரன் அவுட்டாகி நடையை கட்டினார். விஷ்வா ஃபெர்னாண்டோ வீசிய 2வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரோஹித், 3ஆவது பந்தில் சிங்கிள் எடுக்க, 4ஆவது பந்தை மயன்க் அகர்வால் எதிர்கொண்டார். 

அந்த பந்து மயன்க் அகர்வாலின் கால்காப்பில் பட, அதற்கு இலங்கை வீரர்கள் எல்பிடபிள்யூ அப்பீல் செய்தனர். ஆனால் அம்பயர் அனில் சௌத்ரி அவுட் கொடுக்கவில்லை. இதற்கிடையே, அந்த பந்து கவர் திசையில் செல்ல, அதற்கு மயன்க் ரன் ஓடினார். ஆரம்பத்தில் வேண்டாம் என்று மறுத்த ரோஹித், மயன்க் ஓடிவந்ததால் ஓடமுயன்றார். ஆனால் ஓடினால் ரன் அவுட் உறுதி என்பதால் ஒருகட்டத்தில் ரோஹித் மறுக்க, மயன்க் திரும்பி ஓட முடியாததால் ரன் அவுட்டானார். 

அம்பயர் எல்பிடபிள்யூ கொடுக்காததால், அதிருப்தியடைந்த இலங்கை விக்கெட் கீப்பர் டிக்வெல்லா, ஃபீல்டர் த்ரோ அடித்த பந்தை கையில் வைத்துக்கொண்டு, மயன்க் அகர்வாலை ரன் அவுட் செய்யாமல், ரிவியூ எடுக்க வலியுறுத்தினார். கண்டிப்பாக அது அவுட் என்று நம்பிய டிக்வெல்லா, மயன்க் க்ரீஸிலிருந்து ரொம்ப தூரத்தில் நின்றதால், எல்பிடபிள்யூ என்பதிலேயே குறியாக இருந்துவிட்டு, மிக தாமதமாக அசால்ட்டாக ரன் அவுட் செய்தார்.

 

எல்பிடபிள்யூவில் அவுட்டாகாமல், அவசரப்பட்டு, இலங்கை வீரர்கள் அப்பீல் செய்த பதற்றத்தில் ரன் ஓட முயன்று, தேவையில்லாமல் ரன் அவுட்டாகி விக்கெட்டை தாரைவார்த்தார். மயன்க்கை இலங்கை வீரர்கள் வீழ்த்தவில்லை. அவராகவே விக்கெட்டை தாரைவார்த்தார். கடைசியில் பார்த்தால் அந்த பந்து நோ பால். ஆனால் மயன்க் ரன் அவுட்டானதால் களத்தை விட்டு வெளியேற நேர்ந்தது. 

ஒருவேளை மயன்க் ரன் ஓடாவிட்டால், அந்த எல்பிடபிள்யூவிற்கு இலங்கை வீரர்கள் ரிவியூ எடுத்திருந்தால் கூட, அது நோ-பால் என்பதால் மயன்க் அவுட்டாகியிருக்கமாட்டார்.  ஆனால் அவசரப்பட்டு ரன் ஓடி ரன் அவுட்டானார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை