ஆஷஸ் 2021: ட்ராவிஸ் ஹெட், வார்னர் அதிரடி; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 147 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை முடித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் மழை பெய்த காரணத்தினால் முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே முடிவடைந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் - மார்னஸ் லபுசாக்னே இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் சதமடிபார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட லபுசாக்னே 74 ரன்னிலும், டேவிட் வார்னர் 94 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
ஆனால் 5ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்தினார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்களைச் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ட்ராவிஸ் ஹெட் 112 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 196 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.