ஆஷஸ் 2023: அதிரடி காட்டும் இங்கிலாந்து; விக்கெட் எடுக்க தடுமாறும் ஆஸி!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 11 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அலெக்ஸ் கேரி 11 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மிட்செல் ஸ்டாருக்கும் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்டீவ் ஸ்மித் தனது 32ஆவது சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் அவரும் 112 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, ஆஸ்திரேலிய அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீச்சிய ஒல்லி ராபின்சன், ஜோஷ் டங் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை வழக்கம்போல் தங்களது அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸாக் கிரௌலி 48 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஒல்லிய போப்பும் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த பென் டக்கெட் சதத்தை நெருங்கிய நிலையில் 98 ரன்களில் ஆட்டமிழந்து 2 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஹாரி ப்ரூக் - கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஹாரி ப்ரூக் 45 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.