பகலிரவு டெஸ்ட்: 236-ல் இங்கிலாந்து ஆல் அவுட்; இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா சறுக்கல்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் வியாழன் முதல் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி, 150.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. லபுஷேன் 103, வார்னர் 95, ஸ்டீவ் ஸ்மித் 93 ரன்கள் எடுத்தார்கள். ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 84.1 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. டேவிட் மலான் 80, கேப்டன் ஜோ ரூட் 62 ரன்கள் எடுத்தார்கள். ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் லயன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
இங்கிலாந்து அணி ஃபாலோ ஆன் ஆனாலும் 2ஆவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணி முடிவெடுத்துள்ளது. அதன்படி 237 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களைச் சேர்த்துள்ளது. மார்கஸ் ஹாரிஸ் 21 ரன்களுடனும், மைக்கேல் நேசர் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையடுத்து 282 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.