சிட்னி டெஸ்ட்: பேர்ஸ்டோவ் அபார சதம்; இங்கிலாந்து அணி அசத்தல்!

Updated: Fri, Jan 07 2022 14:43 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா வென்றுவிட்டநிலையில், 4ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் அடித்தது. 

ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா கம்பேக் வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்டு சதமடித்தார். இதனால் 416 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஹசீப் ஹமீத் (6), ஜாக் கிரௌலி (18), டேவிட் மலான் (3), ஜோ ரூட் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, 36 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸும் ஜானி பேர்ஸ்டோவும் இணைந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினர்.

ஸ்டோக்ஸ் - பேர்ஸ்டோவ் ஆகிய இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது. 5ஆவது விக்கெட்டுக்கு 128 ரன்களை குவித்தது. ஸ்டோக்ஸ் 66 ரன்களில் ஆட்டமிழக்க, ஜோஸ் பட்லர் டக் அவுட்டானார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் ஜானி பேர்ஸ்டோவ் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். மார்க் உட்டும் நன்றாக ஆடி 39 ரன்கள் அடித்தார். சிறப்பாக ஆடிய உட் அரைசதம் அடிக்காமல் 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.

3ஆம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 258 ரன்கள் அடித்துள்ளது. பேர்ஸ்டோவ் 103 ரன்களுடன் களத்தில் உள்ளார். பேர்ஸ்டோவின் பேட்டிங்கால் டீசண்ட்டான ஸ்கோரை எட்டியுள்ள இங்கிலாந்து அணி, பெரிய ஸ்கோரை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை