ஆஷஸ்: வார்னருக்கு காயம்; கம்பேக் கொடுப்பாரா கவாஜா?
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கபாவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி அசத்தினார்.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக மற்றொரு தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா அணியில் இடம் கிடைக்காமல் தடுமாறி வருகிறார்.
இதற்கிடையில் இன்றைய போட்டியின் போது வார்னர் காயம் காரணமாக பீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் இடம்பிடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் அடுத்த டெஸ்ட் போட்டியில் வார்னர் இடம்பெறாத பட்சத்தில் உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களமிறக்கலாம் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பாண்டிங், “அடுத்த போட்டியில் வார்னரால் விளையாடமுடியவில்லை என்றால், அவருக்கு பதிலாக உஸ்மான் கவாஜாவை களமிறக்கலாம். அவர் கடந்த சில ஆண்டுகளாக ஃபார்ம் இன்றி தவித்து வருகிறார்.
ஆனால் அவர் மிகச்சிறந்த அனுபவம் உடையவர். அதனால் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.