அதிவேகமாக 5ஆயிரம் ரன்கள்; வார்னரை முந்தி சாதனை படைத்த கேஎல் ராகுல்!

Updated: Wed, Apr 23 2025 12:13 IST
Image Source: Google

லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தங்களுடைய ஆறாவது வெற்றியை பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய முகேஷ் குமார் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேப்பிட்டல்ஸின் கேஎல் ராகுல் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். 

அதன்படி இப்போட்டியில் கேஎல் ராகுல் 57 ரன்களைச் சேர்த்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது 5ஆயிரம் ரன்களைப் பூர்த்தி செய்தார். மேற்கொண்டு ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 5ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் எனும் டேவிட் வார்னரின் சாதனையையும் முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக டேவிட் வார்னர் 135 இன்னிங்ஸ்களில் 5ஆயிரம் ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது கேஎல் ராகுல் 130 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல்லை எட்டி புதிய சாதனை படைத்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 5ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள்

  • கேஎல் ராகுல் - 130 இன்னிங்ஸ்
  • டேவிட் வார்னர்- 135 இன்னிங்ஸ்
  • விராட் கோலி - 157 இன்னிங்ஸ்
  • ஏபி டிவில்லியர்ஸ் - 161 இன்னிங்ஸ்
  • ஷிகர் தவான் - 168 இன்னிங்ஸ்

இதுதவிர்த்து இப்போட்டியில் கேஎல் ராகுல் அரைசதம் கடந்ததன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிக 50+ ஸ்கோரை அடித்த வீரர்கள் பட்டியலில் ஏபிடி வில்லியர்ஸை பின்னுக்கு தள்ளியுள்ளார். முன்னதாக எபிடி வில்லியர்ஸ் 43 முறை 50+ ஸ்கோரை கடந்து 5ஆம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது கேஎல் ராகுல் 44 முறை 50+ ஸ்கோரை அடித்து 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி 67 முறை 50+ ஸ்கோரை அடித்து முதலிடத்தில் உள்ளார். 

ஐபிஎல் தொடரில் அதிக முறை 50+ ரன்கள் எடுத்தவர்கள் (இன்னிங்ஸ்)

  • 67 -விராட் கோலி (252 இன்னிங்ஸ்)
  • 66 - டேவிட் வார்னர் (184 இன்னிங்ஸ்)
  • 53 - ஷிகர் தவான் (221 இன்னிங்ஸ்)
  • 46 -ரோஹித் சர்மா (259 இன்னிங்ஸ்)
  • 44 - கே.எல். ராகுல் (130 இன்னிங்ஸ்)*
  • 43 - ஏபி டி வில்லியர்ஸ் (170 இன்னிங்ஸ்)

மேற்கொண்டு இப்போட்டியில் கேஎல் ராகுல் 3 சிக்ஸர்களை அடித்ததன் அடிப்படையில், டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை முந்தியுள்ளார். முன்னதாக சுரேஷ் ரெய்னா 325 சிக்ஸர்களை அடித்து 6ஆம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது கேஎல் ராகுல் 327 சிக்ஸர்களை வீளாசி அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்த பட்டியளில் ரோஹித் சர்மா 537 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர்கள்

  • 537 சிக்ஸர்கள்- ரோஹித் சர்மா
  • 427 சிக்ஸர்கள்- விராட் கோலி
  • 359 சிக்ஸர்கள்- சூர்யகுமார் யாதவ்
  • 347சிக்ஸர்கள் - சஞ்சு சாம்சன்
  • 346 சிக்ஸர்கள்- எம்.எஸ். தோனி
  • 327 சிக்ஸர்கள்- நேற்று ராகுல்*
  • 325 சிக்ஸர்கள்- சுரேஷ் ரெய்னா

இப்போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் தொடக்க வீரர்கள் ஐயடன் மார்க்ரம் 52 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 45 ரன்களையும், இறுதியில் ஆயூஷ் பதோனி 36 ரன்களையும் எடுத்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

Also Read: LIVE Cricket Score

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கருண் நாயர் 15 ரன்னிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் போரல் 51 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 57 ரன்களையும், கேப்டன் அக்ஸர் படேல் 34 ரன்களையும் சேர்த்ததன் மூலம், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை