முடிவுக்கு வருகிறதா அஸ்வினின் ஒருநாள், டி20 கிரிக்கெட் வாழ்க்கை?
நடப்பு ஐபிஎல் சீசனில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது உடல் எடையை குறைத்து, உடல் தகுதியை மேம்படுத்தி, தனது பேட்டிங்கில் அதீத கவனம் செலுத்தினார். இதன் மூலம், அஸ்வினின் பேட்டிங் பல மடங்கு முன்னேற்றம் அடைந்தது. நடப்பு சீசனில் அரைசதம் எல்லாம் பேட்டிங்கில் அஸ்வின் அடித்தார்.
இதனால், அஸ்வினுக்கு பழைய படி டி20, ஒருநாள் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்வின் ஒரு மாயஜால சுழற்பந்துவீச்சாளர். டெஸ்ட் கிரிக்கெட்டில் கும்ப்ளேவிற்கு பிறகு அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தவர். டி20 உலகக் கோப்பை வரலாற்றிலும் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றவர்.
ஆனால், நடப்பு ஐபிஎல் சீசனில் அஸ்வினின் பந்துவீச்சு பழைய மாதிரி இல்லையோ என்ற சந்தேகத்தை தந்துள்ளது. 17 போட்டியில் விளையாடியுள்ள அஸ்வின் மொத்தமாகவே 12 விக்கெட்டுகளை தான் எடுத்துள்ளார். சராசரி 41 என்ற அதிகளவில் உள்ளது. நேற்று ராஜஸ்தான் தோல்வி அடைந்ததற்கு பேட்டிங் தான் முழு காரணமாக இருந்தாலும் பந்துவீச்சிலும் சொதப்பலாக அமைந்தது.
குறிப்பாக அஸ்வின் நேற்றைய அட்டத்தில் 3 ஓவர் வீசி 30 ரன்களுக்கு மேல் விட்டு கொடுத்தார். 6 பந்தையும், 6 மாதிரி வீசியதால் பேட்ஸ்மேன்கள் எவ்வித நெருக்கடியும் இன்றி ரன்களை வாரி வழங்கினர். இதுவே பழைய அஸ்வினாக இருந்திருந்தால் பேட்ஸ்மேன்கள் அடிக்க முடியாத படி பந்துவீசி இருப்பார்.
தற்போது சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், சாய் கிஷோர் என நடப்பு சீசனில் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் அஸ்வினுக்கு இனி ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் கிடைப்பது மிகவும் சவாலான விசயம். இதனால் இனி அஸ்வின் குறைந்த ஓவர் கிரிக்கெட் ஆட முடியாமல் போகலாம். பேட்டிங்கில் கவனம் செலுத்திய அஸ்வின், பந்துவீச்சில் கோட்டை விட்டதாக ரசிகர்களும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.