நான் அணியில் தேர்வானதைக் கேட்டு அழுதுவிட்டேன் - அஸ்வின் உருக்கம்!
ஐபிஎல் 2021 தொடரில், இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ், சன் ரைசர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இப்போட்டி தொடங்கும் முன்பு தொலைக்காட்சியில் பேட்டியளித்த அஸ்வின், இந்திய டி20 அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.
அப்போது பேசிய அஸ்வின், "நான் பொதுவாக எப்போது அதிகம் உணர்ச்சிவசப்பட மாட்டேன். அழ மாட்டேன். என் மனைவி மற்றும் சகோதரிகளிடம் நான், 'ஏன் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் எமோஷ்னல் ஆகி அழுதுவிடுகிறீர்கள்?' என்று கேட்பேன். ஆனால், இப்போது தான் உண்மையில் அதன் காரணத்தை நான் உணர்ந்தேன். அணியில் நான் தேர்வு செய்யப்பட்ட செய்தி கேட்டவுடன் உடைந்து அழுதுவிட்டேன். ஆனந்த மிகுதியிலும் அழுகை வரும் என்பதை அன்று உணர்ந்து கொண்டேன்.
ஒரு கிரிக்கெட் வீரர் தனது கேரியரில் 70 சதவிகிதம் சிறப்பாக விளையாடியிருப்பார். 30 சதவிகிதம் சரியாக விளையாடாமல் போயிருப்பார். ஆனால், எனக்கு தெரிந்து அனைவருமே அந்த 30 சதவிகிதத்தை மட்டும் தான் பேசுவார்கள் தவிர, அந்த 70 சதவிகிதத்தை பற்றி யாருமே பேச மாட்டார்கள். எனக்கு தெரிந்து யாரும் எப்படி பேசியதும் இல்லை" என்று தெரிவித்தார்.
முன்னதாக, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி கடந்த செப்.8ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்திய அணியில் 15 வீரர்கள் கொண்ட பட்டியலும், 3 ரிசர்வ் வீரர்கள் கொண்ட பட்டியலும் வெளியிடப்பட்டது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
அதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு மீண்டும் டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்பட்டது. முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.