“மான் கட்டிற்கு மாற்ற இதை கொண்டு வாங்க” - ரவிச்சந்திரன் அஸ்வின் கோரிக்கை
இந்திய கிரிக்கெட் அணி முக்கிய சுழற்பந்து வீச்சாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியின் மூத்த வீரராகவும் விளங்குகிறார்.
இந்நிலையில் அவரது கிரிக்கெட் வரலாற்றில் எழுந்த சர்ச்சைகளில் முக்கியமான ஒன்று மன்கட் அவுட் முறை. கடந்த 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் அணி வீரர் ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட்டாக்கினார். அதாவது நான் ஸ்ட்ரைக்கரில் இருக்கும் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளரின் கையில் இருந்து பந்து வெளியேறுவதற்கு முன்னதாகவே கிறீஸை விட்டு வெளியே வரக்கூடாது அப்படி வந்தால், பவுலர் பந்துவீசுவதற்கு முன்னதாகவே அவரை ஸ்டம்ப் அவுட் ஆகிக்கொள்ளலாம். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், மாற்றப்பட வேண்டிய கிரிக்கெட் விதிமுறைகள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில், ஃப்ரீ ஹிட் முறை நீக்கப்பட வேண்டும். பவுலர் ஒரு செமீ அதிகமாக கால் எடுத்து வைத்துவிட்டால் உடனே அவருக்கு நோபால் கொடுக்கப்படுகிறது. அந்த பந்திற்கு ஒரு ரன்னும் கொடுக்கப்பட்டு, கூடுதலாக ஒரு பந்தும் போடப்படுகிறது. அதிலும் பேட்ஸ்மேன் அவுட்டானால், அது அவுட்டாக கருதப்படாது. இது நியாயம் அல்ல எனக் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள அஸ்வின்,“கிரிக்கெட்டில் ஃப்ரீ ஹிட் முறை என்பது ரசிகர்களை கவர்ந்த ஒரு முறையாக உள்ளது. எனவே அதனை விட்டுவிட்டு, ஃப்ரீ பால் என்ற முறையை பவுலர்களுக்கு சாதகமாக கொண்டு வரவேண்டும். ஒவ்வொரு முறையும் பேட்ஸ்மேன் பந்து வீசுவதற்கு முன்னதாகவே கிறீஸை விட்டு வெளியே வந்தால் அதற்கு ஃப்ரீ பால் கொடுக்கப்பட வேண்டும். மேலும், அந்த பந்தில் விக்கெட் விழுந்தால் மொத்த ஸ்கோரில் இருந்து 10 ரன்கள் குறைக்கப்பட வேண்டும் என கோரியுள்ளார். மேலும், பவுலரின் கையில் இருந்து பந்து வெளியேறிய பிறகு தான் பேட்ஸ்மேன் கிறீஸுக்கு வெளியில் செல்ல வேண்டும் என்பதை நியாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.