ஆசிய கோப்பை: இலங்கை vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன்!
ஆசியக் கோப்பை தொடர் 2018ஆம் ஆண்டிற்கு பிறகு, இன்றுமுதல் செப்டம்பர் 11ஆம் தேதிவரை அமீரகத்தில் நடைபெறவுள்ளது.இத்தொடருக்கு இந்தியா, பாகிஸ்தான், ஹாங்ஹாங், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன.
இன்று இரவு 7:30 மணிக்கு துபாயில் தொடங்கவுள்ள முதல் லீக் போட்டியில் இலங்கை, ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இதில் இலங்கை அணி இதுவரை மொத்தம் 5 முறை கோப்பை வென்று, இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இருப்பினும், கடந்த முறை படுமோசமாக சொதப்பி லீக் சுற்றுடன் நடையைக் கட்டியது. சமீபத்தில் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால், ஆசியக் கோப்பையில் இம்முறை அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஃப்கானிஸ்தான் அணி கடந்த இரண்டுமுறை மட்டுமே ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடியிருக்கிறது. இரண்டுமுறையும் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறி நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. இம்முறை மேலும் முன்னேற்றம் காணும் நோக்கில், அதிரடியாக செயல்பட வாய்ப்புள்ளது.
துபாய் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், இலங்கை ஸ்பின்னர்கள் வனிந்து ஹசரங்கா, மகீஷ் தீக்ஷனா, வன்டர்சே ஆகியோரை நம்பித்தான் ஷனகா படை களமிறங்க உள்ளது.
இலங்கையைப் போல ஆஃப்கானிஸ்தான் அணியிலும் மூன்று ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். முகமது நபி, ரஷித் கான், முஜிப் உர் ரஹ்மான். இந்த மூன்று பேரும் அபாரமாக பந்துகளை சுழற்றுவார்கள் என்பதால், இலங்கை பேட்டர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவார்கள் எனக் கருதப்படுகிறது.
துபாய் பிட்சில் சராசரி ஸ்கோர் 125 ரன்கள்தான். அதுவும் டாஸ் வென்று இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இதனால், இன்றைய போட்டியில் டாஸ் மிகமுக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இலங்கை: பதும் நிஷங்கா, தனுஷா குணதிலகா, பனுகா ராஜபக்சா, சரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, தசுன் ஷனகா(கே), வனிந்து ஹசரங்கா, மகீஷ் தீக்ஷனா, சமிகா கருணரத்னே, அசிதா பெர்ணான்டோ, ஜெப்ரி வன்டர்சே.
ஆஃப்கானிஸ்தான்: நஜிபுல்லா சத்ரான், ஹஸ்ரத்துல்லா ஸஸாய், இப்ராஹிம் சத்ரான், உஸ்மான் கனி, ரஹ்மானுல்லா குர்பாஸ், முகமது நபி (கே), ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், நூர் அகமது, கரீம் ஜனத்.