ஆசிய கோப்பை 2022: இந்தியாவை வீழ்த்தி பழித்தீர்த்தது பாகிஸ்தான்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடினர். ரோஹித் சர்மா 16 பந்தில் 28 ரன்களும், கேஎல் ராகுல் 20 பந்தில் 28 ரன்களும் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இவர்களின் அதிரடியால் பவர்ப்ளே 6 ஓவரில் 62 ரன்களை குவித்தது இந்திய அணி.
அதன்பின்னர் விராட் கோலி மட்டும் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் சூர்யகுமார் யாதவ்(13), ரிஷப் பந்த் 14, ஹர்திக் பாண்டியா 0, தீபக் ஹூடா 16 ஆகியோர் மறுமுனையில் ஏமாற்றமளித்து ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிய விராட் கோலி அரைசதம் அடித்தார். 44 பந்தில் 60 ரன்களை குவித்தார் கோலி. கோலி ஃபார்மில் இல்லை என்று கூறப்படும் நிலையில், முக்கியமான ஆட்டத்தில் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்து அணியை காப்பாற்றினார். கோலியின் அரைசதத்தால் 20 ஓவர்கல் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசாம் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஃபகர் ஸமானும் 15 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் - முகமது நவாஸ் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதனைத்தொடர்ந்து 71 ரன்களில் ரிஸ்வான் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது நவாஸும் 42 ரன்களோடு ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஆசிஃப் அலி - குஷ்டில் ஷா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றிக்கு 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அர்ஷ்தீப் சிங் வீசிய அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஆசிஃப் அலி பவுண்டரி அடித்து பரபரப்பை அதிகரித்தார்.
பின்னர் சூதாரித்து பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் மூன்றாவது பந்தை டாட் பந்தாகவும், நான்காவது பந்தில் ஆசிஃப் அலியின் விக்கெட்டையும் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கான வாய்ப்பை உருவாக்கினார். இதனால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது.
இறுதியில் பாகிஸ்தான் அணி இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது.