ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன
காயம் காரணமாக பிரபல வேகப்பந்து வீச்சாளர்களான பும்ராவும் ஷாஹீன் அப்ரிடியும் ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். இந்நிலையில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீராவும் காயம் காரணமாக விலகியுள்ளார்.
கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு காயம் ஏற்பட்டதால் உடனடியாக குணமாகி விளையாட முடியாது என்கிற சூழலில் இம்முடிவை அவர் எடுத்துள்ளார். இதையடுத்து இலங்கை அணியில் நுவன் துஷாரா சேர்க்கப்பட்டுள்ளார். 30 வயது சமீரா, இலங்கை அணிக்காக 2015 முதல் 12 டெஸ்டுகள், 42 ஒருநாள், 59 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
ஆசியக் கோப்பை டி20 போட்டியில் ஆகஸ்ட் 27 அன்று இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகள் துபாயில் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.