ஆசிய கோப்பை 2022: ஆஃப்கானிஸ்தானை 129 ரன்னில் சுருட்டிய பாகிஸ்தான்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - ஹஸ்ரதுல்லா ஸஸாய் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் 17 ரன்களில் குர்பாஸும், 21 ரன்களில் ஹஸ்ரதுல்லா ஸஸாய்யும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கரிம் ஜானத் 15 ரன்களில், நஜிபுல்லா ஸத்ரான் 10 ரன்களிலும், கேப்டன் முகமது நபி முதல் பந்திலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
ஆனால் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இப்ராஹிம் சத்ரான் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 35 ரன்களோடு விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார்.
இறுதியில் ரஷித் கான் அதிரடியாக விளையாடி 18 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 129 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராவூஃப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.