ஆசிய கோப்பை 2022: ஆஃப்கானை பழித்தீர்த்தது இலங்கை!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. இரு பிரிவிலும் டாப் 2 இடங்களைப் பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
சூப்பர் 4 சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். இந்நிலையில், சூப்பர் 4 சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் சார்ஜாவில் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹஸரத்துல்லா ஸஸாய் 13 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த இப்ராஹிம் ஸத்ரான் 2ஆவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது.
அதிரடியாக விளையாடிய குர்பாஸ் 45 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இப்ராகிம் சட்ரன் 40 ரன்னில் அவுட்டானார். நஜிபுல்லா சட்ரன் 17 ரன்னிலும், கேப்டன் முகமது நபி ஒரு ரன்னிலும் வெளியேறினர்.
இறுதியில், ஆஃப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்துள்ளது. இலங்கை தரப்பில் தில்சன் மதுசங்கா 2 விக்கெட்டுகளைக் கைப்பறினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இருவரும் 35 மற்றும் 36 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் களமிறங்கிய சரித் அசலங்கா 8 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய குணத்திலகா 33 ரன்களிலும், கேப்டன் தசுன் ஷானகா 10 ரன்களோடு விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய பனுகா ராஜபக்ஷா 14 பந்துகளில் 31 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றியை உறுதிசெய்து விக்கெட்டை இழந்தார்.
இதன்மூலம் 19.1 ஓவர்களில் இலக்கை அணி இலக்கை எட்டியதுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியையும் வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்தது.