ஆசிய கோப்பை 2022: இந்த வீரர் அச்சுறுத்தலாக இருப்பார் - பாபர் ஆசாம்!
ஆசிய கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகள் மோதும் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
பாகிஸ்தான் அணியிடம் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதற்கேற்றார் போல ப்ளேயிங் 11 திட்டமும் போடப்பட்டு வருகிறது. இதே போல பாகிஸ்தான் அணியும் இந்தியாவை வீழ்த்த வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த அணி கடந்த சில போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதால் பலமாக உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியில் ஒரே ஒருவரை நினைத்தால் தான் அச்சுறுத்தலாக இருப்பதாக பாபர் அசாம் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய மூவரும் சிறந்த வீரர்கள் தான். ஆனால் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் சூர்யகுமார் தான் அச்சுறுத்தல் கொடுப்பவராக இருக்கிறார். அவரை சமாளிப்பது சிரமம்.
சூர்யகுமார் யாதவ் ஒரு சிறந்த வீரர், பாகிஸ்தான் அணி மீட்டிங்கில் சூர்யகுமார் குறித்து தான் அதிகம் விவாதித்தோம். அவரை சமாளிப்பதற்காக வியூகங்களை அமைத்துள்ளோம். சூர்யகுமாரின் ஷாட்கள் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். அதுவும் ஃபைன் லெக் திசையில் அடிப்பதை யாராலும் தடுக்க முடியாது” எனக்கூறியுள்ளார்.
இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இதுவரை 23 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 672 ரன்களை அடித்துள்ளார். இதில் 5 அரைசதம் மற்றும் ஒரு சதம் அடங்கும். கடைசியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் 65 ரன்களை அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.