ஆசிய கோப்பை தொடரிலிருந்து வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் விலகல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் 'பி பிரிவில்' இடம்பெற்றுள்ள வங்கதேச அணி தனது முதல் ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக தோல்வியும், அடுத்த ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றியும் கண்டு புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற இன்று நடைபெறும் இலங்கை-ஆஃப்கானிஸ்தான் ஆட்டத்தின் முடிவை எதிர்நோக்கி உள்ளது.
இந்நிலையில் வங்கதேச அணியிலிருந்து காயம் காரணமாக பேட்ஸ்மேன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகியுள்ளார். அவர் விலகி இருப்பது வங்கதேச அணிக்கு பேரிழப்பு. ஏனெனில் இந்த தொடரில் இதுவரை அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார். இலங்கை அணிக்கு எதிராக 89 ரன்கள் மற்றும் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 104 ரன்கள் அடித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த போது தொடை பகுதியில் எற்பட்ட வலியால் அவர் பீல்டிங் செய்யவில்லை. பின் மருத்துவ பரிசோதனையில் அவருக்கு தசைகிழிவு எற்பட்டது உறுதியாகியுள்ளது. இதனால் வரும் உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு அவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முதல் 2 ஆட்டங்களில் விளையாடாத லிட்டன் தாஸ் அணிக்கு திரும்பி இருப்பது பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.