CWC 2023 Qualifiers: மிரட்டிய ஆசிஃப் கான்; 309 ரன்களை இலக்காக நிர்ணயித்தது யுஏஇ!

Updated: Thu, Jul 06 2023 16:34 IST
Image Source: Google

ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 9ஆவது இடத்திற்கான போட்டியில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து விளையாடியது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஆர்யான்ஷ் சர்மா - ஆசிஃப் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தள அமைத்தனர். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இருவரும் அரைசதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் 57 ரன்களுக்கு ஆர்யான்ஷ் சர்மா விக்கெட்டை இழந்தார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விருத்தியா அரவிந்த் 15 ரன்களுக்கும், ரோஹன் முஸ்தஃபா 17 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆசிஃப் கான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அவருக்கு துணையாக விளையாடிய பசில் ஹமீத் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆசிஃப் கான் 12 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 151 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் ஐக்கிய அரபு அமீரக அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களைக் குவித்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை