AUS vs PAK, 3rd ODI: ஆஸ்திரேலியாவை 140 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று (நவம்பர் 10) பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் மேத்யூ ஷார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மெக்குர்க் 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆரோன் ஹார்டி 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த அணியின் கேப்டன் ஜோஷ் இங்கிலிஸும் 7 ரன்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட் 22 ரன்களுக்கு விக்கெட்டை இழந்த நிலையில், நட்சத்திர வீரர்களான கூப்பர் கனொலி 7 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றியும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 88 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் இணைந்த சீசன் அபோட் மற்றும் ஆடம் ஸாம்பா இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். பின் 13 ரன்களில் ஸாம்பாவும், 30 ரன்களில் அபோட்டும் விக்கெட்டை இழந்த நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்பென்சர் ஜான்சன் 12 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ராவுஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.