Boxing Day Test: இரட்டை சதமடித்து வார்னர் அசத்தல்; ஆதிக்கம் செலுத்தும் ஆஸி!

Updated: Tue, Dec 27 2022 12:55 IST
Image Source: Twitter

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

முதலாவது டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவடைந்ததால் பெருத்த சச்சரவுகள் ஏற்பட்டன. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கியது. பாக்ஸிங் டே டெஸ்ட் என அழைப்படும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

அதன்படி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் டெஸ்ட் போட்டி போலவே இப்போட்டியிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் கேப்டன் டீன் எல்கர் 26 ரன்னிலும், சாரெல் எர்வீ 18 ரன்னிலும், டீ புரூய்ன் 12 ரன்னிலும், டெம்பா பவுமா 1 ரன்னிலும், ஜோண்டோ 5 ரன்னில்லும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 67 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து 6 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வெர்ரையன், மார்கோ ஜான்சன் இருவரும் அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருப்பினும் அணியின் ஸ்கோர் 179 ஆக உயர்ந்த போது இந்த இணை பிரிந்தது. இதில் வெர்ரையன் 52 ரன்னிலும் , மார்கோ ஜேன்சன் 59 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் வந்த வேகத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணி 68. 4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் க்ரீன் 5 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும், கம்மின்ஸ், போலண்ட் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் தந்தனர். இதில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டேவிட் வார்னர் ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய உஸ்மான் கவாஜா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னேவும் 14 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். 

இதையடுத்து வார்னருடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் டேவிட் வார்னர் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து சாதனைப் படைத்ததுடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்களையும் கடந்து அசத்தினார். பின்னர் மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

ஆனாலும் சற்றும் சலிக்காமல் விளையாடிய வார்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது இரட்டை சதத்தை நிறைவு செய்தார். இதன்மூலம் 100ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் மற்றும், இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் வீரர் எனும் சாதனைகளையும் தனக்கு சொந்தமாக்கினார்.

பின்னர் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பின் காரணமாக 200 ரன்களைச் சேர்த்திருந்த வார்னர், ரிட்டையர் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். இதையடுத்து வந்த டிராவிஸ் ஹெட் நிதானமாக விளையாட, கேமரூன் க்ரீன் 6 ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார்.

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டிராவிஸ் ஹெட் 48 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா மற்றும் நோர்ட்ஜே தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை