இங்கிலாந்து தொடரில் இருந்து விலகினார் கேமரூன் க்ரீன்; இந்திய தொடரில் விளையாடுவதும் சந்தேகம்?
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் மூன்று போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றிப்பெற்றுள்ளன. இதனையடுத்து இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜோஷ் இங்கிலிஸ் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த மாற்றத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அதன்படி, இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது கேமரூன் கிரீன் முதுகு பகுதியில் காயத்தை சந்தித்துள்ளார். இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளபட்ட ஸ்கேன் பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சியுள்ள ஒருநாள் போட்டிகளில் இருந்து கேமரூன் க்ரீன் விலகியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு காயத்தால் அவதிப்பட்டு வரும் கேமரூன் க்ரீன், இந்தாண்டு இறுதியில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. முன்னதாக நடப்பு இங்கிலாந்து தொடரில் இருந்து நாதன் எல்லிஸ், ஸேவியர் பார்ட்லெட், ரைலீ மெரிடித், பென் துவர்ஷுயிஸ் ஆகியோர் விலகிய நிலையில் தற்போது கேமரூன் க்ரீனும் விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.