AUS vs SA, 3rd Test: ஒயிட்வாஷை தவிர்த்தது தென் ஆப்பிரிக்கா; தொடரை வென்றது ஆஸி!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே நடந்து முடிந்த முதலிரு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 10, மார்னஸ் லபுசாக்னே 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். உஸ்மான் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று 2ஆவது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடியது.
கவாஜாவுடன் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் இன்னிங்ஸை கட்டமைத்தார். கவாஜா 206 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் தனது 13-வது சதத்தை விளாசினார். அதேவேளையில் தனது 30அவது சதத்தை கடந்த ஸ்டீவ் ஸ்மித் 192 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மகராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
3ஆவது விக்கெட்டுக்கு கவாஜா, ஸ்மித் ஜோடி 377 பந்துகளில் 209 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய டிரெவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார். 59 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் சேர்த்த அவர், ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 4ஆவது விக்கெட்டுக்கு கவாஜாவுடன் இணைந்து டிரெவிஸ் ஹெட் 117 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்தார்.
நேற்றைய 2ஆவது நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 131 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 475 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 368 பந்துகளில், ஒரு சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் 195 ரன்களும், மேட் ரென்ஷா 5 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து மூன்றாம் நாள் ஆட்டம் முழுவதும் மழை காரணமாக கைவிடப்பட்டது. பின் நேற்று நடைபெற இருந்த நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் முழுவதும் மழை காரணமாக கவிடப்பட்டது. அதன்பின் இரண்டாவது செஷனில் ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் நிச்சயம் உஸ்மான் கவாஜா இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இன்னிங்ஸை டிகளர் செய்வதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால் வெறும் ஐந்து ரன்களில் உஸ்மான் கவாஜா தனது முதல் சர்வதேச டெஸ்ட் இரட்டை சதத்தை தவறவிட்டார். மேலும் பாட் கம்மின்ஸின் முடிவு பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.
இதற்கிடையில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இப்போட்டியிலும் சொதப்பலான பேட்டிங்கையே வெளிப்படுத்தியது. அணியின் கேப்டன் டீன் எல்கர் 15 ரன்களிலும், சாரெல் எர்வி 18 ரன்களிலும், ஹென்ரிச் கிளாசென் 2 ரன்களோடும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த டெம்பா பவுமா - காயா ஸாண்டோ இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் அவர்களாலும் நீண்ட நேரம் களத்தில் நீடிக்க முடியவில்லை. இதில் பவுமா 35 ரன்களிலும், ஸாண்டோ 39 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வெர்ரெய்ன் 19 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து 326 ரன்கள் பின் தங்கிய நிலையில் நாளை தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த நிலையில் 255 ரன்களுக்கே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது. இதில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 53 ரன்களை எடுத்திருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் கேப்டன் டீன் எல்கர் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த சரெல் எர்வீ - ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் ஓரளவு பங்களிப்பு செய்தனர். இதில் கிளாசென் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின் ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால் இப்போட்டி டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இத்தொடரின் முதலிரு போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக உஸ்மான் கவாஜாவும், தொடர் நாயகனாக டேவிட் வார்னரும் தேர்வு செய்யப்பட்டனர்.