சிட்னி டெஸ்ட்: மழையால் தடைபட்ட முதல் நாள் ஆட்டம்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்டை வென்று 3-0 என்கிற முன்னிலையுடன் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
மழை காரணமாக இன்றைய ஆட்டம் பலமுறை தடைப்பட்டது. இதனால் பல ஓவர்களை இழக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆஸி. அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் குறைந்தது 50 பந்துகளை எதிர்கொண்டாலும் யாராலும் 40 ரன்னைக் கூட தாண்ட முடியவில்லை. வார்னர் 30, மார்கஸ் ஹாரிஸ் 38, லபுஷேன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.
இதனால் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 6, கவாஜா 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.