இந்தியா, பாகிஸ்தானை உள்ளடக்கிய முத்தரப்பு தொடரை ஆஸி விருப்பம்!
இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2012-13-க்கு பிறகு நேரடி கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. அரசியல் சூழல் காரணமாக இருநாடுகள் இடையேயான நேரடி போட்டி நடைபெறவில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதுகின்றன.
இந்த நிலையை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான ரமிஸ் ராஜா முயற்சி எடுத்து வருகிறார்.
இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் 20 ஓவர் போட்டியை ஆண்டுதோறும் நடத்தலாம் என்று பரிந்துரை செய்தார். ஐசிசி கூட்டத்தில் கூட இதுதொடர்பாக விவாதித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த போட்டி மூலம் கிடைக்கும் வருவாயை 4 நாடுகளும் சரி சமமாக பிரித்து கொள்ளலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
இந்தநிலையில் ரமீஸ் ராஜாவின் பரிந்துரை குறித்து ஆலோசித்து வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் ஹாக்லி தெரிவித்தார். இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரை நடத்த ஆஸ்திரேலியா விருப்பமாக உள்ளது என்று அவர் கூறி உள்ளார்.
பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியை பார்க்க அவர் ராவல்பின்டி சென்றார்.
அப்போது இதுகுறித்து பேசிய அவர், “3 நாடுகள் போட்டி எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முத்தரப்பு தொடரை நடத்த ஆர்வமாக உள்ளோம். ஆஸ்திரேலியாவில் ஏராளமான இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் வசிக்கிறார்கள்.
இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியை காண அவர்கள் ஆவலாக உள்ளனர். இதை நாங்கள் நடத்த தயாராக உள்ளோம். அக்டோபர் 23ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.