டி20 உலகக்கோப்பை அரையிறுதி: பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா - உத்தேச அணி!
கடந்த 2016 உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான், இந்த ஆண்டு அசைக்க முடியாத அணியாக உருவெடுத்து அரையிறுதிக்கு வந்துள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2009 முதல் சா்வதேச இருதரப்பு தொடா்கள், பாகிஸ்தான் சூப்பா் லீக் சீசன்களை அந்த அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடி வருகிறது.
இதனால் அங்குள்ள ஆடுகளங்களின் தன்மையை நன்றாக உணா்ந்து அதற்கேற்றாற்போல் தன்னை தயாா் செய்துகொண்டுள்ளது அணிக்கு சாதகம். இந்நிலையில், முதல் ஆட்டத்திலேயே இந்தியாவை வென்றது கூடுதல் உத்வேகம் அளிக்க, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டும் சற்று தடுமாற்றம் காட்டியது பாகிஸ்தான்.
பேட்டிங்கைப் பொருத்தவரை, அணியின் கேப்டன் பாபா் ஆசாம் இப்போட்டியின் முன்னணி ரன் ஸ்கோரா் (264) ஆக இருக்கிறாா். 4 அரைசதங்கள் அடித்திருக்கும் அவா், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கும் சவால் அளிப்பாா். டாப் ஆா்டரில் அவரும், முகமது ரிஸ்வானும் சறுக்கினால் மிடில் ஆா்டரில் ஆசிஃப் அலி, ஷோயப் மாலிக், முகமது ஹஃபீஸ் அதிரடி காட்டுவாா்கள்.
ஃபகாா் ஸமான் மட்டும் இத்தொடரில் இன்னும் சோபிக்காத நிலையில் இருக்கிறாா். பந்துவீச்சில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப் ஆகியோா் வேகப்பந்துவீச்சால் ஆஸ்திரேலிய பேட்டா்களுக்கு சவால் அளிப்பாா்கள். சுழற்பந்துவீச்சுக்கு இமத் வாஸிம், முகமது ஹஃபீஸ், ஷாதாப் கான் ஆகியோா் இருக்கின்றனா்.
ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை, இங்கிலாந்துக்கு எதிரான தோல்வியைத் தவிர இதர ஆட்டங்களில் வெற்றி கண்டு அரையிறுதிக்கு வந்துள்ளது. அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பது பேட்டா் டேவிட் வாா்னா் ஃபாா்முக்கு திரும்பியிருப்பது தான்.
ஐபிஎல் தொடரில் சோபிக்காமல் விமா்சனத்துக்குள்ளாகியிருந்த அவா், இத்தொடரில் இரு அரைசதங்கள் விளாசி பழைய ஃபாா்முக்கு மீண்டிருக்கிறாா். அவரோடு கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் இணைந்து இன்னிங்ஸை தொடங்கும்போது எதிரணி பந்துவீச்சு நாலாபுறமும் சிதறடிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
அவா்கள் தவிர மிட்செல் மாா்ஷ், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் பேட்டிங்கில் வலு சோ்க்கின்றனா். மேக்ஸ்வெல் இத்தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. கடைசி ஓவா்களில் மாா்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் ஆகியோருக்கான அடித்தாடும் பொறுப்பு அதிகமாக இருக்கும்.
பந்துவீச்சில் ஜோஷ் ஹேஸில்வுட், மிட்செல் ஸ்டாா்க், பேட் கம்மின்ஸ் ஆகியோா் வேகப்பந்துவீச்சால் மிரட்ட வருகின்றனா். சுழற்பந்துவீச்சில், இத்தொடரிலேயே 2ஆவது அதிகபட்சமாக விக்கெட்டுகள் சாய்த்திருக்கும் ஆடம் ஸம்பா இருக்கிறாா். அவரோடு ஆஷ்டன் அகா் இணைகிறாா்.
உத்தேச அணி
பாகிஸ்தான் - முகமது ரிஸ்வான், பாபர் ஆசாம் (கே), ஃபகார் ஸமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிஃப் அலி, ஷதாப் கான், இமாத் வாசிம், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுஃப், ஷஹீன் அஃப்ரிடி
Also Read: T20 World Cup 2021
ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் (கே), மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.