உலகக்கோப்பை 2023: விராட் கோலி குறித்து மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஓபன் டாக்!
இந்திய அணி சொந்த நாட்டில் நடக்க இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் 17ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கு அடுத்து இந்திய அணி உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் இந்திய அணி உலகக்கோப்பைக்கு எந்த மாதிரியான அணியை களம் இறக்குமோ, அதே மாதிரியான அணியை களம் இறக்கி விளையாடும். இரண்டு அணிகளுமே ஏறக்குறைய முழு பலம் கொண்ட அணியை இறக்கி தங்களை பரிசோதித்துப் பார்ப்பார்கள். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கு விளையாடி இருந்தது. இந்தத் தொடரை இந்திய அணி ஒன்றுக்கு இரண்டு என ஆஸ்திரேலிய அணியிடம் இழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கும் பொழுது, ஆஸ்திரேலிய சூழ்நிலைக்குப் பழக இந்திய அணி சில நாட்கள் முன்னதாக சென்று அங்கு உள்நாட்டு ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடி தன்னை தயார்படுத்திக் கொண்டது. அதற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. தற்பொழுது ஒருநாள் உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் போட்டிகள் அமைத்து ஏற்பாடு செய்திருக்கிறது.
இரு அணிகள் குறித்தும், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி குறித்தும், ஆஸ்திரேலியா அணியின் மிதவேக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தனது கருத்துக்களை முன்வைத்து பேசி இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் இங்கு இந்த ஆண்டு ஆரம்பத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடினோம். எனவே இரு அணிகள் குறித்தும் இரு அணிக்கும் மிக நன்றாகவே தெளிவு இருக்கும். மேலும் உலகக் கோப்பையில் இரு அணிகளும் தங்கள் முதல் போட்டியை எதிர்த்து விளையாட இருப்பதால், அதற்கு முன்பாக இரு அணிகளும் மோதிக் கொள்வது, உலக கோப்பையில் அணியை அமைத்துக் கொள்வதற்கு வசதியாக இருக்கும். இது ஒரு நீண்ட உலகக்கோப்பை தொடராகும். மொத்தம் ஒன்பது போட்டிகள் லீக் சுற்றில் இருக்கின்றன.
மேலும் தொடக்க ஆட்டங்களில் பெரிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெறுவது எல்லா அணிகளும் உலகக் கோப்பையை சிறப்பாக தொடங்குவதற்கான நல்ல வழியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.விராட் கோலி அவரின் திறமைகள் நாம் பார்த்தது போல மிகச் சிறந்தவை. ஆனால் அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அவருடைய ஆற்றலையும் ஆர்வத்தையும் கொண்டு வந்து கொண்டே இருக்கிறார். இதுதான் அவருக்கும் எனக்குமான வித்தியாசமாக இருக்கிறது. அவருடைய சிறந்த செயல் திறன் இப்படி ஒவ்வொரு போட்டியிலும் அவரை ஆற்றலையும் ஆர்வத்தையும் கொண்டு வர வைக்கிறது என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.