ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் லபுசாக்னே!

Updated: Tue, Jun 22 2021 13:40 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்சேனுக்கு இன்று பிறந்த நாள். 27 வயதை நிறைவு செய்து 28-வது வயதிற்கு அடியெடுத்து வைக்கிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் அறிமுக வீரராக மார்னஸ் லபுசாக்னே களமிறங்கினார். ஆனால் அப்போட்டியின் முதல் இன்னிங்சில் ரன் கணக்கை துவக்காமல் டக்அவுட் ஆனார். 2-வது இன்னிங்ஸிலும் 13 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 

சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 81 ரன்கள் எடுத்தார். அதே ஆண்டு இலங்கைக்கு எதிராக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் நிர்வாகம் அவர் மீது மிகப்பெரிய அளவில் நம்பிக்கை வைக்கவில்லை.

இருந்தாலும், 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் முதல் போட்டியில் களம் இறக்கப்படவில்லை.

2ஆவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஸ்டீவ் ஸ்மித், ஆர்ச்சர் வீசிய பந்தில் காயமடைந்து களத்தை விட்டு வெளியேறினார். இதனால் ஐசிசி கொண்டு வந்திருந்த கன்கெஷன் விதிப்படி மார்னஸ் லபுசாக்னே மாற்று வீரராக களம் இறங்கும் வாய்ப்பு கிடைத்தது. 

இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட லபுசாக்னே தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 267 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 100 பந்தில் 59 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா போட்டியை டிரா செய்ய முக்கிய பங்கு வகித்தார்.

இந்த இன்னிங்ஸ்தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. லீட்ஸ் டெஸ்டில் 74, 80, மான்செஸ்டர் டெஸ்டில் 67, 11, ஓவல் டெஸ்டில் 48, 14 என அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக முத்திரை பதித்தார்.

அதன்பின் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் வரிசையில் 3ஆவது இடத்தை பிடித்து அசைக்க முடியாத வீரராக மாறினார். அதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 185, 162 இரண்டு சதங்களும், நியூசிலாந்துக்கு எதிராக 143, 215 என தனது ரன் வேட்டையைத் தொடர்ந்து, மூன்று இன்னிங்சில் சதம் கண்ட வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 18 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள லபுசாக்னே 1,885 ரன்கள் குவித்துள்ளார். இதில் 10 அரைசதம், 5 சதங்கள் அடங்கும். இவரது பேட்டிங் சராசரி 60.80 ஆகும். தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களில் அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் இவர்தான்.

ஸ்மித்திற்கு மாற்று வீரராக களம் இறங்கி வாய்ப்பை கெட்டியாக பிடித்து, ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவடுத்து மார்னஸ் லபுசாக்னேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை