PAK vs AUS: ஆஸி., ஆலோசகருக்கு கரோனா!
பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்றும் ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்றும் தொடங்குகின்றன. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது.
இதில் முதல் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 ஆட்டம் ஆகியவை ராவல்பிண்டியிலும் கராச்சி, லாகூரில் தலா ஒரு டெஸ்டும் நடைபெறுகின்றன. 2019 ஆஷஸுக்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. இரு அணிகளும் இதுவரை 25 டெஸ்டுகளில் மோதியுள்ளன.
ஆஸ்திரேலியா 13 டெஸ்டுகளிலும் பாகிஸ்தான் 7 டெஸ்டுகளிலும் வென்றுள்ளன. 1998-ல் பாகிஸ்தானுக்கு வந்த மார்க் டெய்லர் தலைமையிலான ஆஸி. அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடருக்கு பெனாட் - காதிர் கோப்பை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகர் ஃபவாத் அகமதும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து 5 நாள்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் பிறந்த ஃபவாத் அஹ்மத் ஆஸ்திரேலிய அணிக்காக 2013-ல் 3 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் முடிவடைந்த பிஎஸ்எல் தொடரில் லாகூர் அணிக்காக விளையாடினார். போட்டி முடிவடைந்த பிறகு திங்கள் அன்று ஆஸ்திரேலிய அணியினர் தங்கும் நட்சத்திர விடுதிக்கு வந்து பரிசோதனை மேற்கொண்டார்.
அதில் அவருக்கு கரோனா உறுதியானது. பரிசோதனையின் முடிவு வரும்வரை அவர் எந்தவொரு ஆஸ்திரேலிய வீரருடனும் உரையாடவில்லை எனத் தெரிகிறது. கரோனா அறிகுறிகள் லேசாக உள்ள நிலையில் கரோனா இல்லை என இரு பரிசோதனைகளில் உறுதியானால் மட்டும் அணியினருடன் ஃபவாத் அகமது இணைவார் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.