ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த பாபர் ஆசாம்!
லாகூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் குவித்தது. பென் மெக்டர்மாட் 104, டிராவிஸ் ஹெட் 89, ஸ்டாய்னிஸ் 49 ரன்கள் எடுத்தார்கள். ஷாஹீன் ஷா அஃப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் பாகிஸ்தான் அணி அபாரமான முறையில் இலக்கை விரட்டி 49 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இமாம் உல் ஹக் 106 ரன்களும் கேப்டன் பாபர் ஆஸம் 114 ரன்களும் எடுத்தார்கள். ஃபகார் ஸமான் 67 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி விரட்டிய அதிகபட்ச இலக்கு இதுதான். இதற்கு முன்பு 2014இல் வங்கதேசத்துக்கு எதிராக 329 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்தது.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 15 சதங்கள் அடித்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் பாபர் ஆசாம். ஆம்லா இதற்கு முன்பு 86 இன்னிங்ஸில் எடுத்த சாதனையை, பாபர் ஆசாம் 83 இன்னிங்ஸில் எடுத்து சாதித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்: குறைந்த இன்னிங்ஸில் 15 சதங்கள்
- பாபர் ஆசாம் - 83 இன்னிங்ஸ்
- ஆம்லா - 86 இன்னிங்ஸ்
- விராட் கோலி - 106 இன்னிங்ஸ்
- வார்னர் - 108 இன்னிங்ஸ்
- தவன் - 108 இன்னிங்ஸ்