சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக புதிய சாதனை படைத்த பாபர் ஆசாம்!

Updated: Mon, May 13 2024 13:57 IST
Image Source: Google

அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று டப்ளினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்மாக லோர்கன் டக்கர் 51 ரன்களையும், ஹாரி டெக்டர் 32 ரன்களையும் சேர்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், அப்பாஸ் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் சைம் அயூப் 6 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் - ஃபகர் ஸமான் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதில் ஃபர்க ஸமான் 78 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வான் 75 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தி அயர்லாந்தை வீழ்த்தி 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதன் மூலம் அந்த அணி கேப்டன் பாபர் ஆசாம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளை வென்ற கேப்டன்கள் வரிசையில் 45 வெற்றிகளை பதிவுசெய்து பாபர் ஆசாம் முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை பாகிஸ்தான் அணியை 78 போட்டிகளில் வழிநடத்தியுள்ள பாபர் ஆசாம் அதில் 45 வெற்றிகளை பதிவுசெய்துள்ளார். 

முன்னதாக உகாண்டா அணியின் கேப்டன் மசாபா 44 வெற்றிகளை குவித்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை தற்போது பாபர் ஆசாம் முறியடித்துள்ளார். இப்பட்டியலில் இந்திய அணியின் எம் எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் கேப்டனாக 41 வெற்றிகளையும் பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை