SL vs PAK, 1st Test: பாபர் ஆசாம் அசத்தல் சதம்; மீண்டும் தடுமாறும் இலங்கை!
பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஒஷாடா பெர்னாண்டோ, கேப்டன் கருணரத்னே களமிறங்கினர். கருணரத்னே ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் 21 ரன்னில் நடையைக் கட்டினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பெர்னாண்டோ 35 ரன்னில் ஆட்டமிழந்தார். ஏஞ்சலோ மேத்யூஸ் டக் அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சண்டிமால் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தார். 76 ரன்னில் அவர் வெளியேறினார். கடைசி கட்டத்தில் தீக்ஷனா 38 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை விளையாடியது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.
அதன்பின் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தின் தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
ஆனாலும் நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் சதமடித்தும் அசத்தினார்.
இறுதியில் அவரும் 119 ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 4 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஒஷாதா ஃபெர்னாண்டோ 17 ரன்களுடனும், கசும் ரஜிதா 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.