வெற்றியை நாங்கள் நெருங்கியும் அதை ஃபினிஷிங் செய்யவில்லை - பாபர் ஆசாம்!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சந்தித்தன. அதில் தொடர் தோல்விகளால் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாராக விளையாடி 46.4 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50, சௌத் ஷகில் 52 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக தப்ரிஸ் சம்சி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 271 ரன்களை துரத்திய தென் ஆபிரிக்காவுக்கு கேப்டன் டெம்பா பவுமா 28, குயின்டன் டீ காக் 24, வேன் டெர் டுஷன் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். அவர்களைப் போலவே ஹென்றிச் கிளாசென் 12, டேவிட் மில்லரும் 29 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை ஏற்படுத்தினார்கள்
இருப்பினும் 4ஆவது இடத்தில் களமிறங்கிய ஐடன் மார்க்கம் பாகிஸ்தானுக்கு சவாலாக மாறி 91 ரன்கள் அடித்து வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்து ஆட்டமிழந்தார். ஆனாலும் மார்கோ யான்சென் 20, கோட்ஸி 10 ரன்களில் அவுட்டானதால் தென் ஆபிரிக்காவின் வெற்றி கேள்விக்குறியான போதிலும் கடைசி நேரத்தில் லுங்கி இங்கிடி 4, கேசவ் மகாராஜ் 7, தப்ரைஸ் ஷம்சி 4 ரன்கள் எடுத்து 47.2 ஓவரில் இலக்கை எட்ட வைத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தனர்.
அதனால் ஷாஹீன் அப்ரிடி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்தும் பாகிஸ்தான் தொடர்ந்து 4ஆவது தோல்வியை பதிவு செய்ததால் லீக் சுற்றுடன் 90% உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் பேட்டிங்கில் எக்ஸ்ட்ராவாக 15 ரன்கள் எடுத்து தவறியது தோல்வியை கொடுத்ததாக கேப்டன் பாபர் அசாம் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
அதை விட கடைசி நேரத்தில் ஹாரிஸ் ராவுஃப் பந்தில் தப்ரைஸ் ஷம்சிக்கு எதிராக எல்பிடபுள்யூ முறையில் கேட்ட போது நடுவர் அவுட் கொடுத்திருந்தால் இதே த்ரில் வெற்றி தங்கள் பக்கம் வந்திருக்கும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “வெற்றியை நாங்கள் நெருங்கியும் அதை ஃபினிஷிங் செய்யவில்லை. அதனால் ஒரு அணியாக ஏமாற்றத்தை சந்தித்துள்ளோம். இப்போட்டியில் நாங்கள் சிறப்பாக போராடினோம். ஆனால் பேட்டிங்கில் 10 – 15 ரன்கள் குறைவாக எடுத்தோம்.
எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களும் ஸ்பின்னர்களும் முடிந்தளவுக்கு போராடியும் துரதிஷ்டவசமாக வெற்றி கிடைக்கவில்லை. மேலும் டிஆர்எஸ் முடிவு இந்த விளையாட்டின் ஒரு அங்கமாகும். ஒருவேளை அது அவுட் கொடுக்கப்பட்டிருந்தால் எங்களுக்கு சாதகமாக இருந்திருக்கும். அரையிறுதி வாய்ப்புக்கு இப்போட்டியில் வெல்ல வேண்டிய நிலைமையில் நாங்கள் இருந்தும் அதை செய்ய முடியவில்லை. எனவே அடுத்த 3 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எங்களுடைய சிறந்த முயற்சிகளை கொடுப்போம். அதன் பின் எங்கே நிற்கிறோம் என்பதை பார்க்க வேண்டும்” என்று கூறினார்.