டி20 உலகக்கோப்பை: கோலியின் சாதனையை காலி செய்த பாபர் ஆசாம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இப்போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் 34 பந்தில் 39 ரன் எடுத்தார். இதில் 32ஆவது ரன்னை தொட்டபோது அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் 2,500 ரன்னை எடுத்தார். இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸில் 2500 ரன்களை கடந்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனையையும் இவர் முறியடித்தார்.
முன்னதாக விராட் கோலி 68 இன்னிங்சில் 2,500 ரன்னை தொட்டிருந்தார். ஆனால் தற்போது 62 இன்னிங்ஸிலேயே பாபர் ஆசாம் இந்த இலக்கை அடைந்து, அதிவேக வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
மேலும் டி20 போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் அவர் தற்போது 7-வது இடத்தில் உள்ளார். கோலி 3,227 ரன்னுடன் முதல் இடத்தில் உள்ளார்.
Also Read: T20 World Cup 2021
பாபர் ஆசம் இந்த உலக கோப்பையில் 300-க்கும் மேற்பட்ட ரன்னை குவித்துள்ளார். இதன் மூலம் ஒரு உலக கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 3ஆவது இடத்தை பிடித்தார். அவர் 6 ஆட்டத்தில் 4 அரை சதத்துடன் 303 ரன் எடுத்துள்ளார். முன்னதாக விராட் கோலி 2014 உலக கோப்பையில் 319 ரன்னும், 2016 உலக கோப்பையில் 317 ரன்னும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.