இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தடை காலம் குறைப்பு!

Updated: Sat, Jan 08 2022 12:53 IST
Image Source: Google

கடந்த வருடம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியது இலங்கை அணி. அப்போது இலங்கை வீரர்களான நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகிய மூவரும் கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

டர்ஹம் சிட்டி செண்டர் என்கிற பொது இடத்தில் மெண்டிஸும் டிக்வெல்லாவும் இருந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானது. இருவர் கைகளிலும் முகக்கவசம் இருந்தாலும் இருவரும் அதை அணிந்திருக்கவில்லை. சிட்டி செண்டர் பகுதியில் காரில் சென்ற ஒருவர் அவர்களுக்குத் தெரியாமல் விடியோ எடுத்தார். இவர்களுடன் வெளியேறிய தனுஷ்கா அந்த விடியோவில் இடம்பெறவில்லை.

இந்த காணொளி வெளியான பிறகு மூன்று வீரர்களும் கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியது பற்றி விசாரணை நடைபெற்றது. இதில் மூவரும் பாதுகாப்பு வளையத்தை மீறி வெளியே சென்றதை ஒப்புக்கொண்டார்கள். ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் முதல் தேர்வாக இருக்கும் மூவரும் இலங்கை கிரிக்கெட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதால் மூவருக்கும் இடைக்காலத் தடை விதித்து இங்கிலாந்திலிருந்து வெளியேற்றியது இலங்கை கிரிக்கெட் வாரியம். 

மூவரும் விமானத்தில் இலங்கைக்குத் திரும்பினார்கள். பிறகு மூவரும் சர்வதேச ஆட்டங்களில் விளையாட ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனால் மூவரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் மூவருக்கும் விதிக்கப்பட்ட ஓர் ஆண்டு தண்டனையை ஆறு மாதங்களுக்குள் ரத்து செய்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். ஜனவரி 7 முதல்  நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகிய மூவரும் சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடற்தகுதியை நிரூபித்தால் மூவரும் அடுத்து வருகிற ஜிம்பாப்வே ஒருநாள் தொடரிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை