BAN vs AUS : தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா!
வங்கதேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மேத்யூ வேட், பென் மெக்டர்மோட், மிட்செல் மார்ஷ், ஹென்ரிக்ஸ், அலெக்ஸ் கேரி என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய டேனியல் கிறிஸ்டியன் 5 சிக்சர்களை பறக்கவிட்டு 39 ரன்களைச் சேர்த்தார். அதைத்தொடர்ந்து ஆஷ்டன் அகர் தனது பங்கிற்கு சில பவுண்டரிகளை விளாசி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி, டி20 தொடரை இழந்ததற்கு ஆறுதலை தேடிக்கொண்டது.