BAN vs AUS: ஷகிப், சைஃபுதின் பந்துவீச்சில் சுருண்ட ஆஸ்திரேலியா!
வங்காதேசம் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கிறிஸ்டியன், நாதல் எல்லீஸ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மேத்யூ வேட்டை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் வங்கதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர்.
அதிலும் ஷகிப் அல் ஹசன் 3.4 ஓவர்களை விசி 9 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 62 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேலும் இது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அடித்த மிக குறைந்த ரன்னாகவும் அமைந்துள்ளது.
இதன் மூலம் வங்கதேச அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதித்துள்ளது.