BAN vs IND 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி இமாலய வெற்றி!

Updated: Sat, Dec 10 2022 18:42 IST
Image Source: Google

இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று வங்கதேசம் 2-0 என ஒருநாள் தொடரை  வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுகிறார். ரோஹித்துக்கு பதிலாக ஷிகர் தவானுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக இறங்கினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் சீனியர் தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங்  ஆடி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை விளாசினார். தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி வரலாற்று சாதனை படைத்தார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 131 பந்தில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 210 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இஷான் கிஷன் - கோலி இணைந்து 2வது விக்கெட்டுக்கு 290 ரன்களை குவித்தனர். இஷான் கிஷன் 210 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவருடன் இணைந்து அபாரமாக விளையாடிய விராட் கோலி, சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்தார். 86 பந்தில் சதமடித்த விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 44வது சதத்தை விளாசினார். கடைசியாக 2019 மார்ச் மாதம் சதமடித்த விராட் கோலி, அதன்பின்னர் ஒருநாள் போட்டியில் இப்போதுதான் சதமடித்தார்.

கோலி 91 பந்தில் 113 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் (3), கேஎல் ராகுல் (8) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, பின்வரிசையில் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் 27 பந்தில் 37 ரன்களை விளாச, 50 ஓவரில் 409 ரன்களை குவித்த இந்திய அணி, 410 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை வங்கதேச அணிக்கு நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட முனைந்தனர். ஆனால் அனாமுல் ஹக் 8 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் லிட்டன் தாஸும் 29 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

அதன்பின் களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் ஒரு முனையில் நம்பிக்கையளிக்க, மறுபக்கம் களமிறங்கிய முஷ்பிக்கூர் ரஹீம், யாஷிர் அலி, மஹ்முதுல்லா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாகிப் அல் ஹசனும் 43 ரன்களோடு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இறுதியில் 34 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பெற்றது. இருப்பினும் முதலிரண்டு போட்டிகளில் வங்கதேச அணி வெற்றிபெற்றதால் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை