BAN vs IND: இரட்டை சதம் விளாசி சாதனைப்படைத்த இஷான் கிஷான்!
இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று வங்கதேச அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்கிறார். ரோஹித்துக்கு பதிலாக இஷான் கிஷன் தொடக்க வீரராக ஆடுகிறார். தீபக் சாஹருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.
முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் ஆடி வேகமாக ஸ்கோர் செய்து நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்து கொடுத்தார். 3ஆம் வரிசையில் இறங்கிய கோலி, இஷான் கிஷனுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது..
இதில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்தார். விராட் கோலி அரைசதம் அடித்தார். இஷான் கிஷன் சதத்திற்கு பின்னர் காட்டடி அடித்து சிக்ஸர் மழை பொழிந்து வங்கதேச பந்துவீச்சாளர்களை அலறவிட்டார்.
இதொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இஷான் கிஷான் 126 பந்துகளில் இரட்டைசதம் விளாசி அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி தரப்பில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த வீரர்களின் பட்டியளில் சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்த இடத்தையும் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய இஷான் கிஷான் 131 பந்துகளில் 10 சிக்சர்கள், 24 பவுண்டரிகள் என மொத்தம் 210 ரன்களைச் சேர்த்து டஸ்கின் அஹ்மத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.