கிறிஸ் கெயில், சேவாக் போன்ற ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி இஷான் கிஷான் வரலாற்று சாதனை!

Updated: Sat, Dec 10 2022 14:50 IST
Image Source: Google

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்த இந்திய அணி தொடரையும் இழந்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

வங்கதேசத்தின் சாட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவானும், இஷான் கிஷனும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். சீனியர் வீரரான ஷிகர் தவான் வெறும் 3 ரன்னில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியதால் இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பிடித்த இஷான் கிஷன், தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வங்கதேச அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்து மளமளவென ரன் குவித்த இஷான் கிஷன் 85 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 

சதம் அடித்தபிறகு கூடுதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 103 பந்துகளில் 150 ரன்கள் கடந்ததோடு, மொத்தம் 126 பந்துகளில் இரட்டை சதமும் அடித்து வரலாறு படைத்தார். இரட்டை சதம் அடித்தபின்பும் அதிரடி ஆட்டத்தை விடாத இஷான் கிஷன், ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்துவிட்டு 210 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இந்தநிலையில், டி.20 போட்டிகளில் விளையாடுவதை விட இந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன், இந்த போட்டியின் மூலம் பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார். குறிப்பாக 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்த இஷான் கிஷன், இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மிக குறைந்த பந்துகளில் இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கிரிஸ் கெய்ல், விரேந்திர சேவாக் போன்ற பெரும் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி அசால்டாக முதல் இடத்தை பிடித்துள்ளார். 

அதே போல் ஒருநாள் போட்டிகளில் மிக குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் இஷான் கிஷன் பெற்றுள்ளார்.

குறைந்த பந்துகளில் இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியல்;

  • இஷான் கிஷன் – 126 பந்துகள்
  • கிரிஸ் கெய்ல் – 138 பந்துகள்
  • விரேந்திர சேவான் – 140 பந்துகள்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை