BAN vs SL: போட்டியின் போது வீரருக்கு நெஞ்சு வலி; மைதானத்தில் பரபரப்பு!
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி தாக்காவில் இன்று தொடங்கி நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் ஹசன் ராய் மற்றும் தமீம் இக்பால் ஆகிய இருவரும் டக் அவுட்டாகினர். ஷாண்டோ 8 ரன்னிலும், மோமினுல் ஹக் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷகிப் அல் ஹசனும் டக் அவுட்டானார்.
24 ரன்களுக்கே வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், முஷ்ஃபிகுர் ரஹீமும் லிட்டன் தாஸும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி வருகின்றனர். இருவருமே சதத்தை நெருங்கிவிட்டனர்.
இன்றைய முதல் நாள் ஆட்டத்தின் முதல் செசன் முடிவதற்கு சற்று முன், திடீரென நெஞ்சு வலியால் துடித்தார் இலங்கை வீரர் குசால் மெண்டிஸ். இதையடுத்து இலங்கை அணியின் ஃபிசியோ வந்து மெண்டிஸை பரிசோதித்துவிட்டு அழைத்துச்சென்றார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.