ஆசிய கோப்பை 2022: வங்கதேசம் அணியில் மேலும் இரண்டு வீரர்கள் விலகல்!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
காயம் காரணமாக பிரபல வேகப்பந்து வீச்சாளர்களான பும்ராவும் ஷாஹீன் அஃப்ரிடியும் ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். இந்நிலையில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீராவும் காயம் காரணமாக நேற்று தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதேபோல் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் லிட்டன் தாஸும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார்.
இந்நிலையில் தற்போது மேலும் இரண்டு வங்கதேச வீரர்கள் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளனர். வங்கதேச அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் மஹ்முத், விக்கெட் கீப்பர் நூருல் ஹசனும் தற்போது காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
அடுத்தடுத்து வங்கதேச அணி வீரர்கள் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச அணி: ஷாகிப் அல் ஹசன் (கே), அனாமுல் ஹக் பிஜோய், முஷ்பிக்கூர் ரஹீம், அபிஃப் ஹொசைன், முசதேக் ஹொசைன் சைகத், மஹ்மூத் உல்லா, ஷேக் மஹேதி ஹசன், முகமது ஷைஃபுதீன், முஸ்தாபிசூர் ரஹ்மான், நசும் அஹ்மது, ஷபீர் ரஹ்மான், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, எபடோட் ஹொசைன், பர்வேஸ் ஹொசைன் எமன், முகமது நைம்.