ZIM vs BAN, 2nd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் சகப்வா ரன் ஏதுமின்றியும், கிரேக் எர்வின் 1, வெஸ்லி மதவெரே 4, சீன் வில்லியம்ஸ் 8 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த சிக்கந்தர் ரஸா - ரியான் பர்ல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரஸா அரைசதம் அடித்ததுடன் 62 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு துணையாக விளையாடிய ரியான் பர்ல் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் மொசடெக் ஹொசைன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய வங்கதேச அணியில் முனிம் ஷஹ்ரியர் 7 ரன்னிலும், அமினுல் ஹக் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தானர். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான லிட்டன் தாஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.
அதன்பின் 36 ரன்களில் லிட்டன் தாஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அஃபிஃப் ஹொசைன், நஜ்முல் ஹொசைன் ஆகியோர் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதமூலம் வங்கதேச அணி 17.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேச அணி 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.