நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது - நூருல் ஹசன்!
ஜிம்பாப்வேவியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று ஹராரேவில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி வெஸ்லி மதவேரா, சிக்கந்தர் ரஸா ஆகியோரது அரைசதத்தின் மூலம் 205 ரன்களைக் குவித்தது. இதையடுத்து இலக்கை துரத்திய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 188 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்விக்குறித்து பேசிய வங்கதேச அணி கேப்டன் நூருல் ஹசன், “கடைசி ஐந்து முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் நல்ல பகுதிகளில் பந்துவீசத் தவறிவிட்டோம், அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். அடுத்த ஆட்டத்திற்கு முன் நாம் மேம்படுத்த வேண்டிய பகுதிகள் (கடைசி ஐந்து முதல் ஆறு ஓவர்களில் பந்துவீச்சு) உள்ளன.
மேலும் பேட்டிங், பந்துவீச்சு அல்லது பீல்டிங் என எந்த காரணத்தையும் நான் காட்ட விரும்பவில்லை, அது நம்மைப் பற்றியது, நாம் அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் நிலையை சிறப்பாக முயற்சித்தனர், இது 50-50 ஆட்டமாக இருந்தது.
200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்வது பெரிய விஷயமாக இருந்திருக்கும். நாங்கள் டிரஸ்ஸிங் அறைக்கு வந்தபோது, விக்கெட் நன்றாக இருந்ததால் மொத்தத்தையும் விரட்டி விடலாம் என்று நம்பிக்கையுடன் இருந்தோம், ஆனால் நான் சொன்னது போல் கடைசி ஐந்து முதல் ஆறு ஓவர்களில் பந்துவீசுவதைப் பொருத்தவரை நாங்கள் நிறைய முன்னேற வேண்டும்.
நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாகக் கொடுத்திருந்தால் அது வித்தியாசமான ஆட்டமாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.