பேட்டர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் - ஹர்திக் பாண்டியா!
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது நேற்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 38 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 39 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்ஷன் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 63 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைச் சேர்த்தது. மும்பை இதரப்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் 48 ரன்களையும், திலக் வர்மா 39 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கத் தவறினர். இதனால் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் என இரு பிரிவுகளிலும் நாங்கள் 15-20 ரன்கள் குறைவாக இருந்ததாக நான் நினைக்கிறேன். நாங்கள் களத்தில் சிறப்பாக செயல்படவில்லை. அடிப்படை தவறுகளைச் செய்தோம். அதன் காரணமாக நாங்கள் 20-30 ரன்கள் அதிகமாக கொடுத்துவிட்டோம். டி20 கிரிக்கெட்டில் இது மிகவும் அதிகமாகும். மேற்கொண்டு எதிரணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
Also Read: Funding To Save Test Cricket
அவர்கள் தவறான ஷாட்டுகளை விளையாடாமல், அதிக வாய்ப்புகளை எடுக்காததன் காரணமாக ரன்களையும் சேர்த்தனர். இந்த தோல்விக்கு நாங்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். பேட்டர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும். விரைவில் அதைச் செய்வார்கள் என்று நம்புகிறேன். இது தொடரின் ஆரம்பம் தான், இன்னும் இத்தொடரில் நிறைய போட்டிகள் எஞ்சியுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.