சொந்த மண்ணில் சாதனையை தக்கவைக்க வேண்டும் - டெம்பா பவுமா!

Updated: Mon, Dec 25 2023 10:57 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. செஞ்சூரியன் நகரில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற உள்ள இத்தொடரில் தென் ஆப்பிரிக்கா தங்களுடைய மிகப்பெரிய கெளரத்தை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

அதாவது 1992 முதல் இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடிய 8 டெஸ்ட் தொடர்களில் 7 வெற்றியை பதிவு செய்துள்ள அந்த அணி தோல்வியை சந்தித்ததே கிடையாது. மறுபுறம் கடைசியாக எம்எஸ் தோனி தலைமையில் கடந்த 2011ஆம் ஆண்டு 1 – 1 கணக்கில் தொடரை சமன் செய்த இந்தியா காலம் காலமாக தென் ஆப்பிரிக்க மண்ணில் சந்தித்து வரும் தோல்விகளை இம்முறை எப்படியாவது நிறுத்தும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

இந்நிலையில் தங்களுடைய சொந்த ஊரில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் தரமும் திறமையும் இந்திய அணியிடம் இருப்பதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார். எனவே இத்தொடரை வென்று சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வரும் கௌரவ சாதனையை தக்க வைத்துக்கொள்ள தாங்கள் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இதில் நிறைய பெருமை இணைந்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியாக அந்த சாதனையை எங்களால் அப்படியே வைத்திருக்க வேண்டும். வீரர்களாகிய நாங்கள் அதை உணர்கிறோம். அதே சமயம் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது குறிப்பிட்ட சவால்கள் இருக்கும் என்பதால் அதை சமாளிப்பதில் நாங்கள் கவனம் செலுத்த விரும்புகிறோம்.

இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது நாங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக அதிக ஆய்வுடன் விளையாட வேண்டும். எனவே அதை ஒப்புக் கொள்கிறோம். ஒரு பேட்ஸ்மேனாக என்னை பொறுத்த வரை பவுலர்கள் இத்தொடரில் உங்களை அழுத்தத்திற்கு உட்படுத்துவார்கள். இந்திய அணியின் பேட்டிங் வரிசையிலும் அனைத்து வகையான சூழ்நிலையிலும் அசத்தக்கூடிய தரமான டெஸ்ட் பிளேயர்கள் இருக்கின்றனர்.

அவர்களும் திடமான அணியாக இருக்கிறார்கள். அவர்கள் தென் ஆப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்றுள்ளோம் என்பதை சொல்ல விரும்புகிறார்கள். எனவே வெற்றிக்கு நாங்கள் கூடுதலான உந்துதல் மற்றும் உத்வேகத்துடன் உண்மையிலேயே சிறப்பாக விளையாட வேண்டும்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை