பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து யூனிஸ் கான் விலகல்!
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்த அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் கான் நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.
2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பை வரை யூனிஸ் கான் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்ததால், அதற்குள்ளாக பாகிஸ்தான் அணியை வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட அணியாக, உலக கோப்பையை வெல்லும் அளவிற்கு தயார்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
யூனிஸ் கானின் பயிற்சியில் நியூசிலாந்தில் டெஸ்ட் தொடரை தோற்ற பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடர்களை வென்றது. இதையடுத்து தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸுக்கு அணியுடன் ஒரு டெஸ்ட், 7 டி20 போட்டிகளில் விளையாட செல்கிறது.
அடுத்தடுத்து முக்கியமான சுற்றுப்பயணங்கள் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து யூனிஸ் கான் விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி, வீரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
ஏனெனில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், டி20 உலகக்கோப்பை என அடுத்தடுத்து முக்கிய தொடர்களில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணிக்கு இது தற்போது பெரும் அதிர்ச்சிகரமான செய்தியாக மாறியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் வாசிம் கான் கூறுகையில்,“யூனிஸ் கான் போன்ற அனுபவம் நிறைந்த பயிற்சியாளரை இழப்பது வருத்தமளிக்கிறது. தொடர்ச்சியான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அவரது இந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த குறுகிய காலத்தில் அவர் செய்த பங்களிப்புகளுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுடன் தனது பரந்த அறிவைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் பிசிபிக்கு உதவ அவர் தொடர்ந்து இருப்பார் என்று நம்புகிறேன்.
மேலும் இங்கிலாந்து தொடர் முடிந்து பிறகு பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளரை நியமிப்பது குறித்து ஆலோசிக்க படும்” என்று தெரிவித்துள்ளார்.