பிபிஎல் 2022: மேக்ஸ்வெல் காட்டடி; ஹரிகேன்ஸ் வீழ்த்தி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அபார வெற்றி!
ஆஸ்திரேலியாவின் பிரபல டி20 லீக் தொடரான பிக் பேஷ் லீக் தொடர் இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 56ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இப்போட்டியில் டாஸ் வென்ற ஹரிகேன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கிளென் மேக்ஸ்வேல் ஆரம்பம் முதல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.
இதன்மூலம் 41 பந்துகளில் சதமடித்த கிளென் மேக்ஸ்வெல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில் 4 சிக்சர், 22 பவுண்டரிகளை விளாசி 154 ரன்களைச் சேர்த்தார். அதிலும்18ஆவது ஓவரில் சந்தீப் லமிச்சனே ஓவரில் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகள் அடித்து அசத்தினார்.
பிபிஎல் போட்டியின் 11 வருடத்தில் இதுவே அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும். இதற்கு முன்பு ஸ்டாய்னிஸ் 79 பந்துகளில் 147 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனையை மேக்ஸ்வெல் முறியடித்துள்ளார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 273 ரன்களைக் குவித்தது. இது டி20 கிரிக்கெட்டில் 3ஆவது அதிகபட்ச ஸ்கோராகவும் அமைந்தது.
அதன்பின் இமாலய இலக்கை துரத்திய ஹரிகேன்ஸ் அணியில் மெக்டர்மோட், டி ஆர்சி ஷார்ட் ஆகியோரைத் தவிற வேறு எந்த வீரரும் சொல்லிக்கொள்ளும் அளவு ரன்களைச் சேர்க்கவில்லை.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹரிக்கேன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே எடுத்தது. ஸ்டார்ஸ் அணி தரப்பில் பிராடி கௌச் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பெற்றது.