முன்னாள் வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்திய பிசிசிஐ!
2018 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிக்குரிய டிவி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றிருந்தது. இந்த உரிமம் அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் 15-வது சீசனுடன் முடிவுக்கு வந்துவிட்டது.
இதைத்தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கான (2023-2027) ஐபிஎல் போட்டிக்குரிய தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மற்றும் இணையவழி பயன்பாட்டுக்கான டிஜிட்டல் உரிமம் ஆகியவற்றுக்கான ஏலம் கடந்த இரண்டு நாளகளாக நடைபெற்றது.
இதில் இந்தியாவில் ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனமும், ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ரிலையன்ஸ் வியாகாம் நிறுவனமும் பெற்றுள்ளது.
தொலைகாட்சி உரிமம் 23,575 கோடி ரூபாய்க்கும், ஓடிடி உரிமம் 20,500 கோடி ரூபாய்க்கும் விற்பனை ஆகியுள்ளது. முதல் முறையாக இந்தியாவில் ஐபிஎல் தொடரை இரண்டு இந்திய நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்கிறது.
இதன் பயணாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுபற்றி பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, “முன்னாள் வீரர்களின் பணத்தேவையைக் கவனித்துக்கொள்வது முக்கியம். வீரர்களின் கிரிக்கெட் காலம் முடிந்த பிறகும் அவர்களுக்குத் துணையாக இருக்கவேண்டியது பிசிசிஐயின் கடைமை. நடுவர்கள் - பாராட்டப்படாத நாயகர்கள். பிசிசிஐ அவர்களுடைய பங்களிப்பை உணர்ந்துகொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.
அதன்பின் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், “தற்போது விளையாடும் அல்லது முன்னாள் வீரர்களின் நலன் மீது பிசிசிஐ அக்கறை கொண்டுள்ளது. அதனால் தான் அவர்களுடைய மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளோம். நடுவர்களின் பங்களிப்புக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம்.
அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்குச் செலுத்திய சேவைக்கு இதன் மூலமாக எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 900 பேர் இதனால் பலனடைவார்கள். இதில் 75% பேருக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை 100% உயர்த்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.