பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதில் சிக்கல் இருக்கது - பிசிசிஐ
இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடக்கும் உலகக் கோப்பை டி20 போட்டிக்காக இந்தியா வரும் பாகிஸ்தான் அணிக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் விசா வழங்கப்படும், மத்திய அரசு உறுதியளித்துள்ளது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
டி 20 உலகக் கோப்பைப் போட்டிகள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்குகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் 45 போட்டிகள் நடத்தப்படுகின்றன.
உலகக்கோப்பை டி20 போட்டி குறித்து ஆலோசிக்க பிசிசிஐ ஆலோசனை குழு நேற்று காணொலி மூலம் கூடியது. இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் கூறுகையில்“ உலகக் கோப்பை டி20 போட்டியை நடத்தும் இடங்கள் குறித்து பிசிசிஐ ஆலோசனை குழுவில் விவாதிக்கப்பட்டது.
சிசிஐ செயலாளர் ஜெய் ஷா, 9 இடங்களில் போட்டியை நடத்தலாம் என ஆலோசனை தெரிவித்தார். அதேபோல் இறுதி போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதுதவிர டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், தரம்சாலா, லக்னோ ஆகிய இடங்களில் போட்டியை நடத்தலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டது.
உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்க கேப்டன் பாபர் அசாம் தலைமையில் வரும் பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்கும் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும். இது தொடர்பாக மத்திய அரசுடன் பிசிசிஐ பேசியுள்ளதால், பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதில் சிக்கல் இருக்காது. ஆனால், அந்நாட்டு ரசிகர்கள் இந்தியாவுக்கு வந்து போட்டியைக் காண்பது குறித்து முடிவு ஏதும் எடுக்கவில்லை. இது தொடர்பாக தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.